அரசியல் கட்சி தொடங்கிய விஜய் 
கட்டுரை

கப்பு முக்கியம் பிகிலு..... தளபதி டூ தலைவர்! விஜய் கடந்து வந்த பாதை!

தா.பிரகாஷ்

தமிழக மக்களின் வாழ்வில் சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தது என்பதற்குக் கடந்த அரை நூற்றாண்டு கால தமிழக வரலாறே சாட்சி!

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் என்ற அந்த நீண்ட பட்டியலில் தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

பல கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சினிமாவின் வழி அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்யின் கடந்த காலம் எப்படியென்று பார்ப்போம்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரே, தனது மகனான விஜய்யை ’நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்து, நாயகன் கதாபாத்திரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், மீண்டும் அதே கூட்டணி இணைந்தது. இதில், கூடுதலாக விஜயகாந்த் சேர்ந்தார். செந்தூரப் பாண்டி திரைப்படம், விஜய்யின் வெற்றிக் கணக்கைத் தொடங்கி வைக்க, அடுத்தடுத்த படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தன.

தொடர் வெற்றிகள் விஜய் ரசிகர் மன்றம் தொடங்க வழிகொடுக்க, அதன் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார். ரசிகர் மன்றத்துக்கென்று தனிக்கொடி, உறுப்பினர் சேர்க்கை எல்லாம் ஜோராக நடக்க, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

திரைப்படத்தில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த விஜய், இலங்கைத் தமிழர் பிரச்னையின்போது, தமிழர் படுகொலையை கண்டித்து 2008இல் உண்ணாவிரதம் இருந்தார். அதற்குப் பின்னரே, விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அதன் அறிமுக விழா புதுக்கோட்டையில் நடக்க, அப்போது விஜய் பேசியதை வைத்து, “விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்” என பலரும் ஆருடம் சொன்னார்கள்.

அவரும் டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். அந்த சமயத்தில், விஜய் நடிப்பில் வெளியான சுறா படம் தோல்வி அடைய, அடுத்த வந்த காவலன் படத்தை, வெளியிடமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. இருப்பதாகக் கருதியதால், உடனே, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள் விஜய்யும், எஸ்.ஏ. சந்திரசேகரும்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு கேட்காமலயே தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தது. அதுவரை விஜய் எந்த கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததில்லை என்பார்கள்.

ஜெ.வுடன் விஜய்

இதற்கிடையே, வேலாயுதம் திரைப்படம் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வெளிவந்தாலும், அடுத்த வந்த ‘தலைவா’ வெளியாக விஜய் படாதபாடு பட்டார். அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே ‘டைம் டு லீட்’ என்ற வாக்கியமும், டிரெய்லரில், “தலைவன்கிறது நாம தேடிப்போற விஷயமல்ல, நம்ம தேடி வர விஷயம்” என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. அது விஜய்யின் அரசியல் பிரவேசத்தைக் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டது.

தலைவா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், படம் வெளியாக தாமதம் ஆனது. அப்போதைய முதல்வருக்கு விஜய் வெளிப்படையாக வேண்டுகோள் வைக்க, படம் பத்து நாள்கள் கழித்துதான் தமிழகத்தில் வெளியானது. மற்ற மாநிலங்களில் முன்னரே வெளியாகியது. 2012ஆம் ஆண்டு, விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி புதிதாக கைகோர்த்தது. அந்த படத்தின் போஸ்டர்களில் விஜய் சுருட்டு புகைப்பது போல இருக்க, அதுக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. துப்பாக்கி என்ற டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளத்துப்பாக்கி என்ற படக்குழு நீதிமன்றத்தை நாடியது.

சிக்கலைத் தந்த தலைவா படம்

இதையெல்லாம் கடந்து படம் வெளியான பிறகு, இஸ்லாமிய அமைப்புகள் படத்தில் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அவதூறாகக் காட்டியிருப்பதாகக் கூறி போராட்டத்தில் இறங்கினர். பிரச்னை பெரிதாக வெடிப்பதை உணர்ந்த படக்குழு, படத்தில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து வெளியிட்டது. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணி கத்தி படத்தில் இணைந்தது. இலங்கையைச் சேர்ந்த லைக்கா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதால், படத்தைத் தடை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. அதனால், லைக்கா என்ற பெயரில்லாமல் படம் வெளியானது. இன்னொரு பக்கம் கதை என்னுடையது என்று நீதிமன்றப் படியேறினார் இயக்குநர் கோபி நயினார்.

இறுதியாகப் படம் வெளியாகி விவசாயிகள், இடதுசாரி அமைப்புகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.  அதோடு படத்தில் வந்த 2ஜி தொடர்பான வசனம் தி.மு.க.வினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புலி படத்தின் வெளியீட்டின் போது, அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், விஜய்யின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அப்போதும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

மெர்சல் பட த்துக்கு முன்னர், இளைய தளபதியாக இருந்த விஜய், அந்தப் படத்துக்கு பின்னர் தளபதியானார். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாக, படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் பா.ஜ.க.வினரைச் சீண்டியது. “ஜோசப் விஜய்” என ஹெச். ராஜா கூற, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியும், சிதம்பரமும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.

மீண்டும் விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவானது சர்க்கார் திரைப்படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்.” எனப் பேச, படத்தில் மாநில அரசுகள் கொடுத்த இலவசத் திட்டங்கள் குறித்து விமர்சனங்கள் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. அதேபோல், ஒற்றை விரல் புரட்சியும் அதிகம் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிகில் திரைப்படத்தின் வசூலில் வரி எய்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தொடர்புடையவர்கள் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்கிடையேதான், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில், நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்த புகைப்படம் வைரலானது.

ரசிகரகளுடன் செல்பி

விஜய் நடிக்கும் படங்கள் ஒரு பக்கம் சர்ச்சையில் சிக்க, அவரின் அப்பா கடந்த 2021ஆம் ஆண்டு, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவுசெய்ததாக தகவல் வெளியானது. அதற்கு உடனே மறுப்புத் தெரிவித்த விஜய், “தனக்கும் அதற்கும் தொடர்பில்லை” என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டார். பின்னர் நீதிமன்றப் படியேறிய விஜய், ”தன் பெயரில் அரசியல் கட்சி தொடங்கக்கூடாது. புகைப்படம், கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது.” என வழக்குத் தொடுத்தார்.

விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் முரண் பரபரப்பாகப் பேசப்பட்ட சூழலில் விஜய் மக்கள் இயத்திலிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. விஜய் மக்கள் இயக்கத்துக்கு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, இயக்கத்தை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

கடந்த 2021-22 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் சுயேச்சையாக 196 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியைப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, 2022ஆம் கல்வியாண்டில் 10 ஆம், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் வரவைத்து கௌரவித்தார் விஜய். அந்த நிகழ்வில் விஜய் பேசிய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அதேபோல், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய், “2026 ல ஃபுட்பால் வேர்ல்டு கப் வருது.' என்று குறிப்பிட்டார். “கொஞ்சம் சீரியஸா சொல்லுங்க...” எனத் தொகுப்பாளர் கேட்க, 'கப்பு முக்கியம் பிகிலு' என்று கூறினார் விஜய்.

லியோ வெற்றிக் கூட்டத்தில்

கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தின்போது, விஜய்யும் தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திரைப்படங்களில் அரசியல் வசனம் பேசியது, இயக்கத்துக்குப் பொறுப்பாளர்களை நியமித்தது, அவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டது, லியோ வெற்றி விழாவில் விருப்பத்தை சூசகமாகக் கூறியது, நிவாரணப் பொருட்கள் வழங்க நேரில் சென்றது என இருந்த விஜய், இன்று தனது கட்சியின் பெயரையும், அதன் நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

எப்போது வருவார் என்று எதிர்பார்த்தவர் வந்துவிட்டார்…இனி என்ன செய்யப்போகிறார் என்பதையும் பார்த்துவிடுவோமே?